×

இயற்கை முறையில் மிளகாய் சாகுபடி செய்து ஏற்றுமதி: கமுதி விவசாயிக்கு தேசிய விருது

ராமநாதபுரம்: இயற்கை முறையில் மிளகாய் சாகுபடி செய்து, ஏற்றுமதி செய்து சாதனை புரிந்த கமுதி விவசாயிக்கு, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் சார்பில் மில்லியனேரி விருது வழங்கப்படுகிறது. ஒன்றிய வேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், நாட்டில் ரூ.10 லட்சத்துக்கு மேல் வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு மில்லியனேரி விருது வழங்கும் திட்டத்தை இந்தாண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

இதன்படி இந்தாண்டு மில்லியனேரி விருதுக்காக நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள கோரைப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த இயற்கை விவசாயி ராமர் உள்பட தமிழகத்தை சேர்ந்த 19 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ராமர் மற்றும் அவருடன் சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் குழு விவசாயிகள் இயற்கை முறையில் மிளகாய் சாகுபடி செய்து, ரூ.75 லட்சத்திற்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளனர். இதற்கான விருது வழங்கும் விழா, விவசாயிகள் கலந்துரையாடல் மற்றும் பயிற்சி பட்டறை ஆகிய நிகழ்ச்சிகள் டெல்லியில் டிச.6 முதல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இது குறித்து இயற்கை விவசாயி ராமர் கூறுகையில், ‘தமிழகத்தில் அதிகளவில் இயற்கை வேளாண்மையில் மிளகாய் சாகுபடி செய்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளோம். ஒன்றிய அரசின் இந்த விருது, என்னைப் போன்ற இயற்கை விவசாயிகளுக்கு ஊக்கம் கொடுக்கும். மக்கள் நோயில்லாமல் வாழ, இயற்கை விவசாயம் செய்து வருகிறோம்’ என்றார். ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் வள்ளல் கண்ணன் கூறுகையில், ‘இந்தியாவில் இந்தாண்டு முதல் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் சார்பில் விவசாயிகளுக்கு மில்லியனேரி விருது வழங்கப்படுகிறது. இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 5 விவசாயிகளை பரிந்துரைத்தோம். அதில் இயற்கை விவசாயி ராமர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்’ என்றார்.

The post இயற்கை முறையில் மிளகாய் சாகுபடி செய்து ஏற்றுமதி: கமுதி விவசாயிக்கு தேசிய விருது appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,
× RELATED பாஜ பிரமுகர் மீது நிலமோசடி புகார்...